×

காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணுக்கு வந்தது பெருமை தருகிறது: பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா பெருமிதம்

மதுரை: காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய மதுரை மண்ணுக்கு வந்தது பெருமை தருகிறது என பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா கூறியுள்ளார். காந்தியடிகள் 1921, செப்.22ல் மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். அதன் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க காந்தியடிகள் மற்றும் ராஜகோபாலாச்சாரியின் பேத்தியான தாரா காந்தி பட்டாச்சாரியா நேற்று மதுரை வந்தார். காந்தி மியூசியத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ்நாடு எனது தாய் நிலம். இங்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமன்றி காந்தி அரையாடை பூண்ட மதுரை மண்ணில் கால் பதித்திருப்பது மிகுந்த பெருமை தருகிறது.

இந்தியாவில் வாழ்கின்ற விவசாயிகளே செயல்படும் மனிதர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒரு அடையாளமாக தன்னை மகாத்மா காந்தி வெளிப்படுத்தி கொண்ட ஒரு தருணம் நிகழ்ந்த மண் தான் இந்த மதுரை. காந்தியடிகள் ஆன்மிகத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். அதற்காக துறவறம் பூண்டு இமயமலைக்கு செல்ல விரும்பவில்லை. இந்த மக்களோடு வாழ்ந்து தாம் உணர்ந்த ஆன்மீகத்தை பரப்ப விரும்பினார். நமது வாழ்க்கையில் சில மனிதர்கள்தான் சிறப்பான வாழ்க்கையை கடைபிடிப்பார்கள். அந்த சிறப்பிற்கு உரியவர்களாக காந்தியும், ராஜாஜியும் வாழ்ந்து காட்டினார்கள். பல்வேறு வண்ண உடைகளோடு நீங்கள் வாழ்கிறீர்கள். ஆனால் உங்கள் தாத்தா காந்தி அப்படி வாழவில்லையே என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள்.

வெள்ளை நிறம் என்பது அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது. அப்படி ஒரு வெண்மை நிறத்தோடு வாழ்ந்தவர்தான் மகாத்மா. அவர் தந்த வண்ணங்கள் தான் இன்றைக்கு நம்மோடு இருப்பவை என்று கூறுவேன். மதுரை மக்கள் காந்தியின் மீதும், காந்தியத்தின் மீதும் மிகுந்த பிடிப்பு கொண்டவர்கள். இங்கு வந்திருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது’’ என்றார். தொடர்ந்து மதுரை மீனாட்சி கோயிலில் தாரா காந்தி பட்டாச்சாரியா சாமி தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி கூரைப்பகுதியில் வரைந்திருந்த பட்டாபிஷேக காட்சியில் காந்தியடிகள் ஓவியம் இருந்ததை கண்டு ரசித்தார். இவருடன் காந்தியடிகளின் கொள்ளு பேரன் வித்தூர் உடன் வந்தார்.

Tags : Gandhiji ,Madurai ,Tara Gandhi Bhattacharya , Gandhiji, Madurai, granddaughter Tara Gandhi Bhattacharya,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி